அவர்கள் இரண்டு பேரும் தினமும் அந்த ஆலயத்துக்கு வருவார்கள்.
அங்கே உள்ள மண்டபத்தில் உட்காருவார்கள். பல தகவல்களை
பகிர்ந்து கொள்வார்கள்.
‘‘பட்டணத்துலே படிச்சிட்டிருக்கிற என் பையனுக்கு இதுவரை பத்துக்கடிதம் போட்டுட்டேன். பதிலே வரலை... எப்படி இருக்கானோ தெரியலே!’’
‘‘இந்தக் காலத்துப் பசங்க அப்படித்தான். தேவை இருந்தா போடுவாங்க.இல்லேன்னா போட மாட்டாங்க!’’
‘‘அப்படியா சொல்றீங்க?’’
‘‘இப்ப வேணும்னா ஒரு பந்தயம் வெச்சுக்குவோமா? உங்க பையனுக்குநான் ஒரு கடிதம் போடுறேன். அதுக்கு உடனே பதில் வரவழைக்கிறேன். என்ன சொல்றீங்க?’’
‘‘அது எப்படி வரும்? முடியாதுங்க. அவன் எழுத மாட்டான்; சோம்பேறி!’’
‘‘எழுத வெக்கிறேன்... என்ன சொல்றீங்க?’’
‘‘அப்படி செஞ்சுட்டீங்கன்னா உங்களுக்கு நூறு ரூபா கொடுத்துடறேன்!’’.இப்படி ஒரு பந்தயத்தோடு அவர்கள் பிரிந்தார்கள். அன்றைக்கே இவர் அந்தப் பையனுக்கு ஒரு கடிதம் எழுதினார். அடுத்த மூன்றாவது நாள் அவனிடமிருந்து ஒரு பதில் கடிதம் பறந்து வந்தது! அதை எடுத்துக்கொண்டு வந்தார்.
‘‘இதோ பாருங்கள்... உங்கள் மகன் எழுதிய கடிதம்!’’
அந்த அப்பாவுக்கு ஆச்சரியம். தன் கண்களையே நம்ப முடியவில்லை.‘‘எப்படி இது...?’’
‘‘எழுத வேண்டிய முறையில் எழுதினேன். பதில் வந்தது!’’
‘‘என்ன எழுதினீர்கள்?’’
‘‘அதுவா... ‘தம்பி! நீ நல்லா படிக்கிறதா உங்கப்பா சொல்றார். பதில் எழுதக்கூட உனக்கு நேரம் இல்லையாம். பரவாயில்லை... இந்தக்கடிதத்துக்குக் கூட நீ பதில் எழுத வேண்டாம். உன் அப்பா சொல்படி நான் இந்தக் கடிதத்துடன் உன் செலவுக்காக ஆயிரம் ரூபாய்க்கான மகரயாழ் காசோலை அனுப்பியிருக்கிறேன். பெற்றுக் கொள்ளவும்!’ அப்படினு கடிதம் போட்டேன்.
உடனே பதில் கடிதம் பறந்து வந்தது. ‘மாமா! உங்க கடிதம் வந்தது. ஆனால் அதில் ‘செக்’ இணைத்து அனுப்ப மறந்து விட்டீர்கள்!’ என்று எழுதி இருக்கிறான். இதோ அந்தக் கடிதம்!’’ _ மகனின் கடிதத்தை அப்பாவிடம் நீட்டினார் இவர். அப்பா யோசிக்க ஆரம்பித்தார். பந்தயப் பணம் நூறு ரூபாயை எடுத்து நீட்டினார். அவர் வாங்க மறுத்தார்.
‘‘இதெல்லாம் ஒண்ணும் வேணாம். ஓர் உண்மையை உங்களுக்குப்புரிய வைக்கிறதுக்காகத்தான் சும்மா அப்படி பந்தயம் கட்டினேன்!’’
‘‘என்ன உண்மை அது?’’
‘‘மனித மனம் எதையும் இழக்க விரும்புவதில்லை. ஆனால், நாம் இழப்பதற்குக் கற்றுக் கொள்ள வேண்டும். அதற்காகத்தான் கோயிலுக்குவருகிறோம்!’’
‘‘என்ன சொல்கிறீர்கள்?’’
‘‘அதோ பாருங்கள்... கோயில் சுவரில் என்ன எழுதி இருக்கிறது?’’
அவர் பார்த்தார். அங்கே எழுதப்பட்டிருந்த வாசகம்: ‘ஆசைகளை விட்டவனே ஆண்டவனைத் தொட்டவன்!’.
இன்றைய பக்தர்களுக்கு ஆலயங்களை நெருங்கத் தெரிகிறது; ஆண்டவனை நெருங்கத் தெரிவதில்லை!
தென்கச்சி கோ.சுவாமிநாதன்








